Saturday, 12 May 2012

வா அருகில் வா!



திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம் - வாழ்வில்
    திண்டாட்ட மேயின்றித் திளைத்திருக்கலாம்


கல்யாணச் செலவதனைக் குறைத்திருக்கலாம் - வீண்
    கடன்அதிகம் ஆகாமல் தடுத்திருக்கலாம்


பிள்ளைகளைக் குறைவாகப் பெற்றிருக்கலாம் - மேற்
    படிப்புக்கு வழிகள்பல வகுத்திருக்கலாம்


ஊட்டமிகு உணவுவகை கொடுத்திருக்கலாம் - அதைப்
    பெற்றுவெகு குதூகலத்துடன் வளர்ந்திருக்கலாம்


சுட்டகொடும் நோய்வராமல் தவிர்த்திருக்கலாம் - ஊசியால்
    குத்தவரும் மருத்துவரை தடுத்திருக்கலாம் 


செய்திருக்கலாம் இத்தனையும் எனநினைக்கும் நானும்
   செத்திருக்கலாம் முன்னமென நினைக்குமுன்னே


மானுடர்கள் அஞ்சிநிற்கும் மரணமெனும் தேவதையே!
    சாவதனை கெஞ்சிநிற்கும் பாரெனையே


இதயமெனும் வாசல்தனை இதமாகத் திறந்துவைத்து
    இளமங்கை யே உனக்குக் காத்திருக்கின்றேன்


மலர்பாதம் நோகாமல் அடியெடுத்து நீயுந்தன்
    வளைக்கரங்கள் சிவக்காமல் சேர்த்தணைத்தால்


துன்பங்கள் துக்கங்கள் தொல்லைகள் நோய்களதால்
    அணையாத எரிமலையாய் பொங்கும் நானும்


ஆராவாரம் எதுவுமின்றி அணைந்து அங்கு
    அமைதியுடன் படுத்திருப்பேன் நன்கு


நிர்ச்சலன மாய்வானில் பறந் திருப்பேன் 
    நிம்மதி யாய்காற்றில் தவழ்ந் திருப்பேன்


எங்கிருந்தோ எனைப்பார்க்கும் இள மங்கையே
    இங்கிருந்தே உனையழைக்கும் எனைப்பாராயோ?

1 comment: