Saturday, 16 February 2013

அன்பின் விசுவரூபம்

எனதினிய   மனைவியே
   மனதினிய தோழியே
என்றுமே இனிநீதானே
   எனதுயிரில்சரி பாதியே !

அடுப்பெரிக்கத் தெரியாமல்
   அன்றுவந்தாய் - இன்று
அறுசுவை யோடு உண்டி
   அளித்து மகிழ் கின்றாய் !

என்வீடு ஈதில்லை
   என்றுரைத்தாய் - இன்று
எனைவிட்டு ஓர்கணமும்
   பிரிய மறுக்கின்றாய் !

நகைச்சுவையாய் சொன்னாலும்
   பகைக்கவே செய்தாய் - இன்று
ன் 
ஆனந்தச் சிரிப்பாலே வீட்டை
   அதிர வைக்கின்றாய் !

இயேசுதான் சொன்னாரென்று
   ஏந்திழைநீ உறுதியுடன்
ஏழையென்னை மணமுடித்தாய்
   இன்பக்கனவொன்றை பரிசளித்தாய் !

ஆசிரியப் பணிமுடித்து
   அவசரமாய் உடன்வந்து
ஆவிபறக்கத் தேநீர்
   ஆற்றித்தருவாய் அதுஅமுதம் !

உருவத்தில் சிறிதானாலும் உள்ள
   உயரத்தில் இமயம்நீ
அன்பில்விசுவ ரூபம்நீ உனை
   அண்ணாந்து பார்க்கின்றேன் !

காதலர் தினத்தினிலே ஒரு
   காலைமுடக்கி உன்முன்
கையில் கவிமலருடனே
   காத்திருப்பேன் கனிவுடனே !

கடைக்கண் சிரிப்பாலே
   கனிவாய் மொழியாளே
ஆதரிப்பாய் பெண்ணே உன்
   ஆயுள் முழுவதுமே !!