Sunday, 24 February 2013


நலம், நலமறிய அவா !!

பஞ்சு பஞ்சாய் பரந்துவிரிந்து வானில்
பரவச மூட்டுவெண் முகிலே நீயும்
திருச்சிமா நகர்வழியே செல்வீ ராயின்
தெம்மாங்கு பாடி நிற்கும் உழவர்கூட்டம்
எம்மருங்கும் ஆடிநிற்கும் ஆடிப் பட்டம்
சொல்லவருங் கவிதையிதை சூடி நிற்கும்
மன்னைநல் லூரினிலே மனங்கவரும் முறையினிலே
வெள்ளை யடிக்காத வெள்ளாளர் தெருவினிலே
படிக்கின்ற பசங்களுடன் பாங்குடனே வீற்றிருக்கும்
பண்பாளன் உள்ளத்திலே பாசமது ஊற்றன்றோ !

கொடுக்குமீசை சினம்வாரின் துடிக்கு மதை
எடுக்குமாசை வேண்டாம் ஏன் வீண்ஆசை?
பண்ணோடு வரஎன்னைப் பணித்ததென்ன செல்வா!
என்னோடு பேசிடத்தான் கடிதமொரு செலவா?
கால் பந்தாட்ட விழுப்புண்கள் பெற்றததன் விளைவா?
சொல்லாட்டம் போடும்பல வீணர்களை எண்ணி
நினைவாட்டம் போட்டீரோ வீட்டினுள்ளே அமைதியாக!

வேலைநிமித்தமாய் வேற்றூர்தான் சென்றீரோ? நல்லதொரு
வேளைவர வில்லையென ஏங்கிநின் றிட்டீரோ?
காளைஎனக் குதித்திடும் இப்பருவத்தினில் வாழ்க்கை
பாலைஎனக் கொதித்திடும் நிலையை எண்ணி
துறந்தாரே நன்றுஎன துறவறம்தான் சென்றீரோ?
துக்க மதை விட்டீரோ!

காலக் கணக்கணவன் காட்டெருமை வாகனத்தவன்
சால நிறைந்தவுமை கண்டாலும் ஓடிடுவான்!
காலமென்ற கரையை சோகம் அரிக்கும்காட் டாறு
பாலமென்ற மடலதையே தடுக்கும் பாரு!

புலராதுன் ஒளிமடல்தான் வாராமல் சூரியா!
மலராதென் முகத்தாமரை என் தலைவா!
கண்ணிற் கருமேகந்தனை காணாமல் வைத்துவிட்டு
மன்னாநான் வாடுகிறேன் மரத்திடிதான் பட்டதுபோல்
சொன்னா லும்போதும் சோர்வகற்றி எழுதிடுவாய்
உன்னா லானவிவ் வுதவியினைச் செய்குவியே!!