Friday, 25 May 2012

கண்ணீர் அஞ்சலி

கார்மேக மெனகவிதை பொழிந்தகண்ண தாசா! - எமை
உளம்நோக வைத்துவிட்டுப் போனதென்ன லேசா?

அரசியலில் பகடையாய் ஆட்டநினைத்தார் - நீயோ
கவியரசாய் சொற்சிலம்பம் ஆடி நின்றாய்
விரசமாய் பாடுகிறான் என்று பலர்
விகாரமாய் உரைத்துவிட்ட போதி னிலும்
சரசமாய் பெற்றுவிட்ட அனுபவங்களை கவிதை
கனிரசமாய் தந்துமெரு கூட்டிவிட்டாய்

உன் கவிதைகள்

தொட்டிலிலே குழந்தைகளைத் தூங்க வைத்ததுண்டு
கட்டிலிலே கன்னியரைக் காணவைத்த துண்டு
வீட்டினிலே இளைஞர்களை வீறுகொள்ளவைத்து
நாட்டினிலே தலைவர்களை உசுப்பிவிட்ட துண்டு
பாட்டினிலே தமிழை தாலாட்ட வைத்து
கூட்டினிலே குயிலாய் நீஇசைத்த கீதம்
ஏட்டினிலே படக் காட்சியிலே விரவி
கேட்கையிலே மெய்சிலிர்க்க வைத்ததுண்டு

சிறுவயதில் கவியுலகம் எமை காணவைத்தாய்
எளிமையான சொற்களைசதி ராட வைத்தாய்
இளமையான என்எண்ணங்களை எதி ரொலித்தாய்
வளமையான வாழ்வுக்கு வழி காண்பித்தாய்
பழமையான வழக்கத்திற் கறம் பாடினாய்
தேமதுரத் தமிழோசைப் பரப்பச் சென்றாய் - நின்
பூஅதரத் தமிழோசை இனிஎன்று கேட்பேன்?