Thursday, 7 March 2013



பிரியமுள்ள எதிரியே!

பிறக்குமுன்னர் உனக்குத் தேவன்
பெயரிட்டாரே டாரதி என்று
தேவனுக்கு என்றும் துதிசொல்லி
தூய வாழ்வு வாழவேண்டி!

இளந்தளிராய்நீ இருக்கும் போதே
பிஞ்சுக்கரங்களால் ஆர்வமுடன் - பாட
புத்த கத்தின் பக்கங்களை
புரட்டுவாய் அழகுற அன்றேநீ!


ABCD சொல்லித் தந்தேன்
திரும்பநீ மகளே சொல்லும்போது
மறந்துதான் வாய்தடு மாறும்போது
சொல்லிக் கொடுக்க முயற்சித்தால்
நீசொல்லாதே என்று சொல்லி
நிலைதடு மாற வைத்திடுவாய்!

முதன்முதல் வாக்கியம் சொந்தமாக
பேசிவிட்டாளே என மகிழ்ந்தேன்
இப்போதும் எது சொன்னாலும்
அதையே தானே சொல்லுகின்றாய்!
என்ன செய்வேன் பெண்ணேநான்!

புள்ளிமானாய் துள்ளிய உன்னை
ஃபோட்டோஎடுக்கக் காசில்லை - ஆனால்
எக்ஸ்ரே எடுக்க நேர்ந்ததைஎண்ணி
இன்றும் நான்மனம் கலங்குகின்றேன்,

கடவுள் தந்த சுதந்திரமே!
கரும்பே தேனே கனிரசமே!
இறைவன் இயேசுவின் பாதம்தனை
இறுகப் பிடித்து வாழ்விலென்றும்
இணையில்லா ஆசிர் பலபெற்று
என்றும் வாழ்க இன்புறவே!!