Tuesday, 1 October 2013



கவிமதி

மேகங்கள் இடைப் படலாம்
மின்னலால் தடைப் படலாம்
கவின்மிகு நிலவதனை
கண நேரம் தவிர்த்திடலாம்
கார்முகிலை புறந்தள்ளி
களிப்புடனே முகம்காட்டும்-இனி
கவிதைநிலா இணையத்திலே!

இரவின் இருளினிலே
இனிமை தரும் நிலவு
துன்பக் கடலினிலே
தோணியாய் துணை நிலவு!
சந்தோச தருணங்களில்
சங்கீதமாய் கானம்பாடி
எங்கிருந்தாலும் என்னுடனே
இணைந்துவரும் குளிர்நிலவு!
இனிஎன்றும் பிரிந்திடாத
இறையருள்தான் வேண்டுகின்றேன்!

Wednesday, 13 March 2013



இதய தெய்வம்!

காலையில் எழுந்தவுடன் உன்
கண்ணாடியைத் தேடித் தருகின்றேன்
கவலைப்படாதே கண்ணே!
நான்உனக்கு
இன்னுமொரு கண்தான்
காலம் முழுவதும்!

பள்ளிக்குச் சென்றபின்
அலைபேசியில் ஆணையிடுகிறாய்
சிலிண்டரை மூடச்சொல்லி
கவலைப்படாதே கண்ணே!
நான்உனக்கு
இன்னுமொரு கைதான்
காலம் முழுவதும்!

பள்ளிக்கு தாமதமாகிறது
புறப்படவேண்டும் உடனே என்கிறாய்
மிதிவண்டியை எடுக்கிறேன்
கவலைப்படாதே கண்ணே!
நான் உனக்கு
இன்னுமிரு கால்கள்தான்
காலம்முழுவதும்!

ஈதெல்லாம் ஓன்றுமில்லை!
இயம்புதற்கு பெரிதும் இல்லை!
கணந்தோறும் என் நலனை
காக்கவே துடித்திடும் என்
இன்னுமொரு இதயமாய்
இம்மண்ணுலகில் நீ
இருக்கும்போது!!

Thursday, 7 March 2013



பிரியமுள்ள எதிரியே!

பிறக்குமுன்னர் உனக்குத் தேவன்
பெயரிட்டாரே டாரதி என்று
தேவனுக்கு என்றும் துதிசொல்லி
தூய வாழ்வு வாழவேண்டி!

இளந்தளிராய்நீ இருக்கும் போதே
பிஞ்சுக்கரங்களால் ஆர்வமுடன் - பாட
புத்த கத்தின் பக்கங்களை
புரட்டுவாய் அழகுற அன்றேநீ!


ABCD சொல்லித் தந்தேன்
திரும்பநீ மகளே சொல்லும்போது
மறந்துதான் வாய்தடு மாறும்போது
சொல்லிக் கொடுக்க முயற்சித்தால்
நீசொல்லாதே என்று சொல்லி
நிலைதடு மாற வைத்திடுவாய்!

முதன்முதல் வாக்கியம் சொந்தமாக
பேசிவிட்டாளே என மகிழ்ந்தேன்
இப்போதும் எது சொன்னாலும்
அதையே தானே சொல்லுகின்றாய்!
என்ன செய்வேன் பெண்ணேநான்!

புள்ளிமானாய் துள்ளிய உன்னை
ஃபோட்டோஎடுக்கக் காசில்லை - ஆனால்
எக்ஸ்ரே எடுக்க நேர்ந்ததைஎண்ணி
இன்றும் நான்மனம் கலங்குகின்றேன்,

கடவுள் தந்த சுதந்திரமே!
கரும்பே தேனே கனிரசமே!
இறைவன் இயேசுவின் பாதம்தனை
இறுகப் பிடித்து வாழ்விலென்றும்
இணையில்லா ஆசிர் பலபெற்று
என்றும் வாழ்க இன்புறவே!!


Sunday, 24 February 2013


நலம், நலமறிய அவா !!

பஞ்சு பஞ்சாய் பரந்துவிரிந்து வானில்
பரவச மூட்டுவெண் முகிலே நீயும்
திருச்சிமா நகர்வழியே செல்வீ ராயின்
தெம்மாங்கு பாடி நிற்கும் உழவர்கூட்டம்
எம்மருங்கும் ஆடிநிற்கும் ஆடிப் பட்டம்
சொல்லவருங் கவிதையிதை சூடி நிற்கும்
மன்னைநல் லூரினிலே மனங்கவரும் முறையினிலே
வெள்ளை யடிக்காத வெள்ளாளர் தெருவினிலே
படிக்கின்ற பசங்களுடன் பாங்குடனே வீற்றிருக்கும்
பண்பாளன் உள்ளத்திலே பாசமது ஊற்றன்றோ !

கொடுக்குமீசை சினம்வாரின் துடிக்கு மதை
எடுக்குமாசை வேண்டாம் ஏன் வீண்ஆசை?
பண்ணோடு வரஎன்னைப் பணித்ததென்ன செல்வா!
என்னோடு பேசிடத்தான் கடிதமொரு செலவா?
கால் பந்தாட்ட விழுப்புண்கள் பெற்றததன் விளைவா?
சொல்லாட்டம் போடும்பல வீணர்களை எண்ணி
நினைவாட்டம் போட்டீரோ வீட்டினுள்ளே அமைதியாக!

வேலைநிமித்தமாய் வேற்றூர்தான் சென்றீரோ? நல்லதொரு
வேளைவர வில்லையென ஏங்கிநின் றிட்டீரோ?
காளைஎனக் குதித்திடும் இப்பருவத்தினில் வாழ்க்கை
பாலைஎனக் கொதித்திடும் நிலையை எண்ணி
துறந்தாரே நன்றுஎன துறவறம்தான் சென்றீரோ?
துக்க மதை விட்டீரோ!

காலக் கணக்கணவன் காட்டெருமை வாகனத்தவன்
சால நிறைந்தவுமை கண்டாலும் ஓடிடுவான்!
காலமென்ற கரையை சோகம் அரிக்கும்காட் டாறு
பாலமென்ற மடலதையே தடுக்கும் பாரு!

புலராதுன் ஒளிமடல்தான் வாராமல் சூரியா!
மலராதென் முகத்தாமரை என் தலைவா!
கண்ணிற் கருமேகந்தனை காணாமல் வைத்துவிட்டு
மன்னாநான் வாடுகிறேன் மரத்திடிதான் பட்டதுபோல்
சொன்னா லும்போதும் சோர்வகற்றி எழுதிடுவாய்
உன்னா லானவிவ் வுதவியினைச் செய்குவியே!!


Saturday, 16 February 2013

அன்பின் விசுவரூபம்

எனதினிய   மனைவியே
   மனதினிய தோழியே
என்றுமே இனிநீதானே
   எனதுயிரில்சரி பாதியே !

அடுப்பெரிக்கத் தெரியாமல்
   அன்றுவந்தாய் - இன்று
அறுசுவை யோடு உண்டி
   அளித்து மகிழ் கின்றாய் !

என்வீடு ஈதில்லை
   என்றுரைத்தாய் - இன்று
எனைவிட்டு ஓர்கணமும்
   பிரிய மறுக்கின்றாய் !

நகைச்சுவையாய் சொன்னாலும்
   பகைக்கவே செய்தாய் - இன்று
ன் 
ஆனந்தச் சிரிப்பாலே வீட்டை
   அதிர வைக்கின்றாய் !

இயேசுதான் சொன்னாரென்று
   ஏந்திழைநீ உறுதியுடன்
ஏழையென்னை மணமுடித்தாய்
   இன்பக்கனவொன்றை பரிசளித்தாய் !

ஆசிரியப் பணிமுடித்து
   அவசரமாய் உடன்வந்து
ஆவிபறக்கத் தேநீர்
   ஆற்றித்தருவாய் அதுஅமுதம் !

உருவத்தில் சிறிதானாலும் உள்ள
   உயரத்தில் இமயம்நீ
அன்பில்விசுவ ரூபம்நீ உனை
   அண்ணாந்து பார்க்கின்றேன் !

காதலர் தினத்தினிலே ஒரு
   காலைமுடக்கி உன்முன்
கையில் கவிமலருடனே
   காத்திருப்பேன் கனிவுடனே !

கடைக்கண் சிரிப்பாலே
   கனிவாய் மொழியாளே
ஆதரிப்பாய் பெண்ணே உன்
   ஆயுள் முழுவதுமே !!

Wednesday, 30 January 2013


சங்கீத  மேகம்


அன்புமகளிடம் இரவில்
அலைபேசியில் பேசிடும்போது
தொலைவினிலே பாடல்ஒன்று
காதினிக்க கேட்குமென்று
ஆவலோடு காத்திருந்தேன்!
நேற்றுவரை பார்த்திருந்தேன்!!

சாதகம் செய்கின்றேன்
சங்கீதத்தை என்றுசொல்லி
பாதகப் பொய்சொன்ன
பைங்கிளியைக் கண்டால்நீயும்
மறந்திடாதே எனவுரைத்து
விரைந்துவா மழைமே கமே, 

Monday, 28 January 2013

 நிரந்தரமானது

காவல்துறை சீருடையுடன் ஆய்வாளர்கள் இருசக்கர வாகனத்தில்
எதிர்ப்படும்போதெல்லாம் உடைந்து நொறுங்கி விழும் மனதை
தூக்கி எடுத்து தூசி தட்டி நடக்க வைக்க பெரும்பாடு படுகின்றேன்,
அப்பாயிண்மென்ட் ஆர்டர் கிடைத்தும் சேரமுடியாமல் செய்த
விதி கொடுத்த வலி மட்டும் நிரந்தரமானதுதான் மிச்சம்

பாடிப் பரவசப்படுத்தும் குயில்கள்

ஆடி அகமகிழவைக்கும் மயில்கள்


பார்க்குமிடமெங்கும் பசுமைபடர் சோலைகள்


துள்ளும் மீன்கள்நிறை தாமரைத் தடாகங்கள்


பவனிவர பாய்ந்து செல்லும்


பளிங்குக் குதிரைக்காய்


காத்திருந்தேன் காத்திருந்தேன்


கர்வமுடன் காத்திருந்தேன்


வந்துநின்ற ஒட்டகத்தை


வாய்மூடாமல் பார்த்துநின்றேன்!


இப்போதுதான் புரிந்தது !


பாலைவனப் பயணத்திற்கு


பட்டு டுத்திய புரவி எதற்கு?

Tuesday, 8 January 2013

நன்றி !     நன்றி !!     நன்றி !!!


இறைவா உனக்கு நன்றி !

சுட்டெரித்தாலும்
உயிர் வாழ்ந்திட ஓர்
சூரியன் தந்தாய்

இருளில் நான் தவிக்கும்போது
இதயத்தை வருடிவிடும்
இரு நிலவுகள் தந்தாய்


நேற்றோ

தென்றலை நீ அனுப்பிவைத்தாய்
தேமதுரக் குரலில் அதைப் பாடவைத்தாய்
அலைகடலென துள்ளி ஆடவிட்டு
அளவில்லா ஆனந்தம் அள்ளித்தந்தாய்

மேகக் கூந்தலை புறந்தள்ளி
கண்சிரிக்கும் விண்மீனை அனுப்பிவைத்தாய்
சிநேக வெளிச்சத்தை வார்த்தைகளால்
சிந்தாமல் சிதறாமல் அள்ளித் 
தெளித்தாய்


இறைவா உனக்கு நன்றி !!

இயந்திர வாழ்வே இயல்பாகி மனம்அன்று
இடிந்திருந்த வேளை தனில்
இரக்கமாய் நீ பரிசளித்த
இந்த இனிமைமிகு அதிர்ச்சிக்காய்

இறைவா உனக்கே என்றென்றும் நன்றி !!!